BLOG 1 FLOG 1 இளம் விதவை

சாலையில் அவளைக் கடந்து ‘மகளிர் விடியல் பயணம்’ பேருந்து சென்றது. அதில் பயணித்தால் ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரியை அடையலாம். இருந்தாலும் ‘ஓசி’ என்று யாரும் தன்னை அழைத்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். பயணச்சீட்டு வாங்கி கூட அந்த பேருந்தில் பயணம் செய்ய அவள் விரும்பவில்லை. ஆதலால் அந்த பேருந்தில் ஏற மனமின்றி ‘ஆமாம் இவர்கள் விடிய வைத்தது போதும்’ என்று அங்கலாய்த்தவாறே தன் வாழ்க்கை இப்படி நிலை குலைந்ததை எண்ணி கவலை கொண்டு கண்ணீர் மல்க நடந்தே செல்லலானாள். அவளுக்கு இந்த உலகில் எவரும் தனக்கு உதவ இல்லை என்ற எண்ணம் மேலோங்கியதால் கண்களில் கண்ணீர் வழிந்தது.

பெற்றோர் பார்த்து முறைப்படியே முரளியை கரம் பிடித்திருந்தாள். ஒரே ஊரைச் சேர்ந்த இருவரும் சிறுவயதிலிருந்தே அறிமுகமானவர்கள். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அவன் பத்தாவது படித்துக்கொண்டிருந்தபோதே அவனின் தந்தை குடிப்பழக்கத்தால் இறந்துவிட வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். பின் படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து தச்சு வேலைக்கு செல்லத் தொடங்கினான். அவனின் திறமை ஊரெங்கும் பேசப்பட்டது. அவன் திட்டமிட்டு தயாரித்த மர உபகரணங்கள் அனைவரையும் கவர்ந்தது. அவற்றின் நேர்த்தி பார்ப்போரை வியக்க வைத்தது. மரத்தினால் அவன் செய்த உருவங்கள் காண்போரை பிரமிக்க செய்தது. தெய்வ அருள் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று ஊரே மெச்சும் அளவிற்கு அவன் புகழ் பரவியிருந்தது.

ஒருநாள் அம்மன் கோயிலுக்கு அவள் தாயுடன் சென்றிருந்த போதுதான் கோயில் பூசாரி முரளியைப் பற்றி அம்மாவிடம் சொன்னார். தங்கள் பெண்ணிற்கு பொருத்தமான மணமகன் இவன். மிகவும் திறமைசாலி. இதோ இங்குள்ள மரத்தினால் ஆன தெய்வ வடிவங்களை செய்தது அவன்தான். தங்கள் மகளுக்கு எதிர்காலம் நன்றாய் இருக்கும். யோசனை செய்து நல்ல பதிலாக சொல்லுங்கள் என்றார்.

அம்மா அவளின் கருத்தை கேட்டபோது தான் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தற்போது திருமணம் வேண்டாம் என்றுதான் சொன்னாள் சாந்தா. ஆனால் அவள் அம்மாவோ, சாந்தா உனக்கே தெரியும் அப்பாவிற்கு உள்ள மது அருந்தும் பழக்கத்தால் நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம் என்று. எனக்கு தெரிந்த வரையில் முரளிக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று கேள்விப்படுகிறேன். அந்த மாதிரி கணவன் கிடைப்பது தற்போது அரிதாக உள்ளது. நீ முரளியை திருமணம் செய்து கொள்வதே நல்லது என்று நான் நினைக்கிறேன். பிறகு உன் விருப்பம் என்றாள் அம்மா.

அப்பாவின் மதுப்பழக்கத்தின் கொடிய விளைவுகளை தினம் தினம் அனுபவித்துக்கொண்டிருப்பவள் அவள். அம்மா சொல்வது சரியாகவே பட்டது அவளுக்கு. நீண்ட யோசனைக்குப் பின் அவள் சம்மதம் தெரிவிக்க, அவளின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமண நாளும் குறிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் ஒரு நாள் பேரிடியாக வந்தது அந்த செய்தி. அவளது தந்தை மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் வரும்போது எதிரே வந்த லாரியில் மோதி தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்று. அவள் சோகத்தில் மூழ்கினாள். அவளால் அழுவதற்கு கூட முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. அம்மாவும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். என்னதான் அப்பா குடிகாரராக இருந்தாலும், அவள்மீது பாசத்தை பொழிந்திடுவார்.சிறந்த பழக்க வழக்கங்கள் கொண்டிருந்தவராகத்தான் அவர் இருந்தார். கெட்ட நண்பர்களின் சகவாசத்தாலும் அரசு தாராளமாக விற்பனை செய்யும் மதுவினாலும் இந்த குடிப்பழக்கம் அவருக்கு ஏற்பட்டது. அது இறுதியில் அவர் உயிரையே காவு வாங்கிவிட்டது.

அவள் தாய் செய்வதறியாது திகைத்து நின்றாள். திருமணத்தை எவ்வாறு நடத்தப்போகிறோம் என்று கவலையில் ஆழ்ந்தாள்.

ஊர்க்காரர்கள் கூடினர். சடலம் உடற்கூராய்வுக்கு பின்பே வரும் என்பதால் அனைவரும் காத்திருந்தனர். இப்போதெல்லாம் இறப்பு சுற்றத்தாரை அதிகம் பாதிப்பதில்லை. சொற்ப சுற்றத்தாரே வந்திருந்தனர். வார்டு கவுன்சிலர் இன்னோவாவில் வந்து இறங்கினார். கூடவே அண்டங்காக்கைகளும் வந்திருந்தனர். குடிப்பழக்கத்தினால் ஏற்படும் இழப்புகள் குறித்து கவுன்சிலர் கவலைப்பட்டார். போன மாதம்தான் உள்ளூரில் மதுக்கடை திறக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்த போது அவர்களை கண்டித்து அரசின் திட்டங்களை எதிர்ப்பது சட்ட விரோதம் என்று அனைவரிடமும் முழங்கினார். ஆனால் இந்த ஒரு மாதத்தில் குடிப்பழக்கத்தின் தீமைகளை தற்காலிகமாக உணர்ந்திருந்தார்!

சாந்தாவை தேற்றி திருமணம் பற்றி கவலையுற வேண்டாம் என்று முரளி குடும்பத்தார் ஆறுதல் கூறினர்.

அவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமத்துடனேயே சென்று கொண்டிருந்தது. கல்லூரி தோழி ஒருத்தி அவள் கல்விக் கட்டணத்தை செலுத்தி தொடர்ந்து படிக்க உதவினாள்.

இறுதியாண்டு படித்து கொண்டிருந்ததால் அவள் படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்யலாம் என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

தந்தையின் மறைவு அவளை மிகவும் பாதித்திருந்தது. தன் தந்தையின் இறப்புக்கு இந்த அரசின் மதுக்கடைகளே காரணம் என்று தீர்மானமாக நம்பினாள். தொலைக்காட்சியில் அரசியல் தலைவி ‘தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகரித்து விட்டார்கள்’ என்று ஆதங்கப்பட்டார். அவர் குரலில் இருந்த பரிவை உணர்ந்தாள் சாந்தா! அது ஆறுதலாக இருந்தது சாந்தாவுக்கு. தன் அம்மாவிற்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவள் விரும்பினாள்.

தேர்தல் வந்தது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் சாந்தாவுக்கு எந்த குழப்பமும் இல்லை. தன் தாயின் இந்த நிலைமைக்கு காரணமான மதுக்கடைகளை மூடப்போவதாக கூறிய அரசியல் தலைவியின் கட்சிக்கு தான் தன்னுடய ஓட்டு என்று முன்பே தீர்மானித்திருந்தாள். அந்த தலைவியின் கரிசனம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெண்ணால் தான் ஒரு பெண்ணின் துன்பத்தை உணர முடியும் என்று அவள் நம்பினாள். எவ்வளவு அன்போடும் கரிசனத்தோடும் அவர்கள் இருக்கிறார்கள் என்று வியந்து போனாள்.

சில மாதங்களில் மிகவும் சிரமத்துடன் அவள் திருமணம் நடந்தேறியது. முரளி தாராள மனம் கொண்டவன். அவனே திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டான். முரளியை கணவனாக பெற்றமைக்கு கடவுளுக்கு நன்றி சொன்னாள் சாந்தா.

தேர்தல் முடிவுகள் வந்தது. அவள் வாக்களித்த கட்சி அமோக வெற்றி பெற்றது. அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். தன் தாயின் வாழ்க்கை சீரழிய காரணமாக இருந்த மதுக்கடைகளை இந்த அரசு மூடிவிடும். இனி எல்லா மகளிர் வாழ்க்கையிலும் விடியல்தான் என மகிழ்ந்தாள். தான் வாக்களித்த கட்சி ‘இல்லை என்று சொல்லும் கடவுளுக்கு’ நன்றி சொன்னாள். சாந்தாவை இவ்வளவு மகிழ்ச்சியாக முரளி பார்த்ததில்லை.

அன்று முதல் தினமும் தொலைக்காட்சி செய்தியை பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டாள். மதுக்கடைகளை மூடும் முடிவை அரசு அறிவிக்க காத்திருந்தாள்.

சென்னையில் ஒரு பெரிய கட்டிடத்திற்கு தச்சு வேலை செய்யும் ஒப்பந்தம் முரளிக்கு வந்தது. அவனை பிரிய மனமில்லாமல் அது வேண்டாம் என்று சாந்தா தடுத்தாள். நாம் இருக்கும் பண நெருக்கடியில் இந்த வேலையை ஒப்புக்கொண்டால் பண நெருக்கடி குறையும் என முரளி சொல்ல விருப்பமின்றி அவன் சென்னை செல்ல சம்மதித்தாள்.

முதல் மாதமே தன் சம்பளத்தில் உணவு செலவு போக கணிசமான தொகையை அனுப்பினான் முரளி. சாந்தா மிகவும் மகிழ்ந்து போனாள். சிறு வயது முதல் தான் பட்ட கஷ்டங்கள் தீரப்போவதாக நம்பினாள். தினமும் முரளி யுடன் அலைபேசியில் உரையாடி மனம் மகிழ்ந்தாள்.

நாளடைவில் முரளி சாந்தா வுடன் அலைபேசியில் உரையாடுவது குறைந்தது. அது பற்றி அவள் கேட்டபோது வேலை பளு என்று சொன்னான். சாந்தாவிற்கு வருத்தமாக இருந்தது.

ஆறு மாதம் நன்றாக கழிந்தது, ஏழாவது மாதம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் முரளி யிடமிருந்து பணம் வரவில்லை. அலைபேசியில் அழைத்த போதெல்லாம் அவன் பதிலளிக்கவில்லை. ஒரிரு நாள் சென்றபின் அவனுடன் வேலைக்கு சென்ற பக்கத்து ஊரைச் சேர்ந்த பார்த்திபனுக்கு அலைபேசியில் உரையாடினாள். அவனோ என்னத்தை அண்ணி சொல்ரது. அண்ணன் தினமும் அளவுக்கதிகமாய் குடித்துவிட்டு மயங்கியே கிடக்கிறார். வேலைக்கும் வருவதில்லை. இப்படியே போனால் கெட்டது நடந்துடும் அண்ணி. பாத்து ஏதாச்சும் செய்யுங்க. நான் சொன்னா வேலையைப் பாருடாங்கராறு. நான் சொன்னேன்னு சொல்லிப்புடாதீங்க. நீங்களா கூப்படற மாதிரி கூப்பிடுங்க என்றான். சரி பார்த்திபா நீ அவரு பக்கத்தில் இருக்கும் போது எனக்கு சொல்லு. நான் உன் நம்பரில் பேசுகிறேன் என்றாள்

பேசி வைத்தது போல பார்த்திபன் அழைத்து சொல்ல சாந்தா அந்த எண்ணிலேயே அழைத்தாள். பார்த்திபன் போனை முரளியிடம் தந்து ‘அண்ணி’ என்று கூற பார்த்திபனை முறைத்தான் முரளி. எனினும் வேறு வழியின்றி அவன் சாந்தாவிடம் பேச அந்த பேச்சிலேயே மதுவின் வாடை வீசியது!

சாந்தா ஒன்று மட்டும் முடிவு செய்து இருந்தாள். அலைபேசியில் முரளியிடம் எதுவும் கேட்கக்கூடாது. எப்படியாவது அவனை ஊருக்கு வர வைத்துவிட வேண்டும்.

உடனே ஊருக்கு வருவதாக சொன்ன முரளி ஒரு வாரத்தில் வந்து சேர்ந்தான். வந்தவனிடம் சாந்தா எதுவும் பேசாமல் இருந்தாள். அன்று மாலையே வெளியே சென்று வந்த முரளி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தான். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட சாந்தாவுக்கு வசவுதான் பதிலாக கிடைத்தது. யாருக்கும் கட்டுப்படாத முரளி மதுவுக்கு அடிமையானான். அவன் திறமையை எல்லாம் இழந்தான். நடுங்கும் கைகளோடு அவனால் அவன் தொழிலை திறம்பட செய்ய இயலவில்லை.

திருமணமாகி நான்கு வருடங்கள் ஓடி விட்டது. சாந்தாவுக்கு குழந்தை பேறு இல்லை. அவளது தாய் வருந்தினாள். திருமணம் வேண்டாம் என்று சொன்ன உன்னை தவறான ஒருவனுக்கு மணம் முடித்து வைத்து விட்டேனே என்று அழுது புலம்பினாள்.

இப்போதெல்லாம் சாந்தா தொலைக்காட்சி செய்தியை பார்ப்பதில்லை. மதுக்கடைகள் மூடப்படும் என்ற நம்பிக்கையை அவள் இழந்திருந்தாள். இளம் விதைவைகள் அதிகரிப்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை என்பது அவளுக்கு நன்கு புரிந்துவிட்டது.

இந்த நிலையில் முரளியின் உடல்நிலை மிகவும் மோசமானது. ஆஸ்பத்திரிக்கு அரும்பாடு பட்டு அழைத்து சென்றாள் சாந்தா. ஒரு வாரம் ஆகியும் முரளியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

இன்று காலை மருத்துவர் அவளை அழைத்து முரளியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறியதிலிருந்து அவள் மிகவும் கலக்கமுற்றாள். முரளிக்கு உணவாக அளிக்க கஞ்சி வீட்டில் தயார் செய்து இப்போது ஆஸ்பத்திரி திரும்பிக்கொண்டிருந்தாள் அவள்.

ஆஸ்பத்திரியை நெருங்க நெருங்க அவள் மனம் மிகவும் அச்சமுற்றது. முரளி பிழைக்க மாட்டானோ என்ற எண்ணம் அவளை கலவரப்படுத்தியது. தானும் ஒரு இளம் விதவை ஆகப்போகிறோமோ என்று கலங்கினாள்.

தான் எடுத்து வந்திருந்த அரிசி நொய் கஞ்சியை தன் கணவனின் தலையை தன் மடியில் வைத்த வண்ணம் அவன் வாயில் சிறிதளவு ஊற்றினாள். முரளி அவளை பரிதாபமாக பார்த்தான்.அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவன் சுவாசம் செய்ய மிகவும் சிரமப்பட்டான். வைத்த கண் வாங்காமல் சாந்தாவையை பார்த்துக்கொண்டிருந்த அவன் சற்றும் கவலையின்றி சாந்தாவை அரசின் உதவியால் ‘இளம் விதவை’ ஆக்கினான்.

சாந்தா உலகமே அவளை ஏமாற்றி விட்டதாக எண்ணினாள். யாரையும் நம்ப அவள் தயாராக இல்லை. இதுவரை அவளிடம் காணப்படாத ஆக்ரோஷம் வெளிப்பட்டது. தான் சென்ற முறை தவறு செய்து விட்டேன். மீண்டும் அது நடக்காது என்று சூளுரைத்தாள்.

அன்று மாலை அவள் கணவனின் சிதைக்கு ‘இளம் விதவையாக’ அவள் மூட்டிய தீயின் உஷ்ணத்தில் மேற்கே சூரியன் அஸ்தமித்தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *